புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தல் தோல்வியால், பகுஜன் சமாஜ் கட்சித் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி, தம் கட்சியில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நாடாளுமன்ற மக்களவையில் தனது கட்சியின் பிராமண எம்.பி.க்களுக்கு பதில் ஜாதவ் சமூகத்தினருக்கு பதவி அளிக்க கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மக்களவையில் பிஎஸ்பி தலைவராக இருக்கும் பிராமணர் ரித்தேஷ் பாண்டேவை மாற்றிவிட்டு, கிரீஷ் சந்திர ஜாதவை நியமிக்க வேண்டும். துணைத் தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த ராம் சிர்மோனி வர்மாவை நியமிக்க வேண்டும் என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரீஷ் சந்திர ஜாதவ் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதன் மூலம் காலியாகும் கட்சி கொறடா பதவியை சங்கீதா ஆஸாத்துக்கு அளித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதியுடன் கூட்டமைத்து போட்டியிட்டார் மாயாவதி. இதில் அவருக்கு சமாஜ்வாதியை விட இரு மடங்கு அதிகமாக 10 எம்.பி.க்கள் கிடைத்தனர்.
அப்போது மக்களவையின் முக்கிய பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டன. அதைஇப்போது மாற்றி தலித்துகளை அமர்த்தியுள்ளார் மாயாவதி. உத்தர பிரதேச தேர்தலில் மாயாவதிக்கு ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
தனித்தொகுதியில் தோல்வி
உ.பி.யில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியின் பிஎஸ்பி, 2-வது முறையாக தனித்து போட்டியிட்டது. இதில், 2017 தேர்தலில் 19 தொகுதிகள் பெற்றவருக்கு இந்த முறை வெறும் ஒரு தொகுதியே கிடைத்தது. அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1.18 கோடி வாக்குகள் பெற்றும் பலனில்லை.
தலித்துகள் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பி.க்கு, 84 தனித்தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2017-ல் பிஎஸ்பிக்கு கிடைத்த வாக்குகள் 18 சதவிகிதம் குறைந்து இந்த முறை அது, 12.88 சதவீதமாக குறைந்துள்ளது.
உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் கட்சியில் அவரைத் தவிர வேறு முக்கியத் தலைவர்கள் இல்லை. உ.பி.யில் 2007 சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிராமணர் சதீஷ் சந்திர மிஸ்ராவை கட்சிக்குள் கொண்டு வந்தார். இவரது வரவு, தலித்துகளின் பல பிரிவினரை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதன் தாக்கமும் முதல் முறையாக இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.
மாயாவதியின் ஜாதவ் சமூக வாக்குகள் இந்த முறை பாஜக பக்கம் சாய்ந்துள்ளது. இதை சமாளித்து வரும் 2024 மக்களவை தேர்தலில், தனது தலித் வாக்குகளின் செல்வாக்கை பெற பல்வேறு முயற்சியில் இறங்கியுள்ளார் மாயாவதி. இதில் ஒன்றாக மக்களையில் தனது எம்.பி.க்களுக்கானப் பதவி மாற்றங்களை, முழுக்கவும் தலித் சமூகத்தினருக்கு சாதகமாக செய்துள்ளார்.