அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்கத்தக்கது என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிடுள்ள அறிக்கையில்,
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த 2020-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசின் அரசாணைக்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வெளிவந்திருப்பது அரசு மருத்துவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.
அரசு மருத்துவர்கள் முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதன் மூலம் பெரும் பயனடைவார்கள்.
குறிப்பாக மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டால் தகுதியுடைய மருத்துவர்கள் மேற்படிப்பில் ஈடுபட்டு அரசு மருத்துவத்துறையில் தங்களை மேலும் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக மருத்துவ சேவையாற்றுவார்கள்.
எனவே முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பதை த.மா.கா சார்பில் வேரவேற்று, உயர் மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கி தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.