உக்ரைனை ஊடுருவியதால் எக்கச்சக்கமான வீரர்களை இழந்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் போரில் ரஷ்யா குறைந்தது 7,000 வீரர்களை பலிகொடுத்துள்ளதுடன், ரஷ்ய வீரர்கள் சுமார் 14,000 முதல் 21,000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
நான்கு தளபதிகள், ஏராளம் படைவீரர்கள் என பலிகொடுத்துள்ள ரஷ்யாவின் இழப்பைக் கணக்கிட்டால், புடின் உக்ரைனை ஊடுருவதற்காக அனுப்பிய படைவீரர்களில் ஐந்தில் ஒரு பங்கு சேதமடைந்திருக்கலாம் என பென்டகன் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்ய ஊடுருவல் கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து முன்னணிகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலம், கடல் மற்றும் வான்வழியாக குறைந்த அளவே முன்னேறியிருப்பதாகவும், ரஷ்யப் படைகள் தொடர்ந்து பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும், பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
என்றாலும், உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. Kyiv மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஏவுகணைகளில் ஒன்று தாக்கப்பட்டாலும், அது 16 தளங்கள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த ஏவுகணை விழுந்ததால் கட்டிடம் தீப்பிடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில், உயிரிழந்த அந்தப் பெண்ணின் உடல் அருகே, அவரது மகன் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சியைக் காணலாம்.