சியோல்: தென் கொரியாவில் ஒமைக்ரானால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்கொரிய நோய் தடுப்பு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது. தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) 6,21,328 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால், அவசர பிரிவில் அனுமதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகமாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 24,17,174 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அங்குதான் உலகளவில் தற்போது அதிகமாக உள்ளது. இரண்டாவது இடத்தில் வியட்நாம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் இதுவரை 82 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர்.
முன்னதாக, சீனாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்ததால் சுமார் 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
இந்தநிலையில், ஒமைக்ரான் காரணமாக தென்கொரியா, வியட்நாம் நாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. கரோனா பெருந்தொற்றால் உலகில் 46 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.