புதுடெல்லி: முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த 2015 செப்டம்பரில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெளியிட்டார்.
அவர் தனது அறிவிப்பில், “இந்த திட்டம் 2014-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும். நிலுவைத் தொகைகள் 4 தவணைகளில் வழங்கப்படும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் புதிதாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்குமான இடைவெளி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரி செய்யப்படும்” என கூறினார்.
இந்நிலையில் இத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “இத்திட்டத்தில் ஒரே வகுப்பை சேர்ந்தசம அந்தஸ்து கொண்டவர்களுக்கு மாறுபட்ட ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரே பதவி மற்றும் ஒரே பணிக்காலம் கொண்ட வீரர்கள் இடையே ஒரு தனி வகுப்பை இத்திட்டம் உருவாக்கிறது” என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது. இதில் மனுதாரரின் புகார்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.
“ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசின் கொள்கையில், அரசியலமைப்புச் சட்ட குறைபாடுகள் எதையும் நாங்கள் காணவில்லை. இத்திட்டம் சட்டப்படி செல்லும். அரசின் கொள்கை முடிவுசரியானது” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.