இலங்கை கேட்டுள்ள 7,500 கோடி ரூபாய் கூடுதல் கடனுதவியை தருவது குறித்து இந்தியா இன்று முடிவெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உக்ரைன் போர் சூழல் அச்சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியை இலங்கை நிதியமைச்சர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கூடுதலாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவியை பசில் ராஜபக்ச கேட்டதாக தகவல் வெளியாகியள்ளது.
இது தவிர மேலும் சில நிதியுதவிகளையும் அந்நாடு கோரியுள்ளதாகத் தெரிகிறது. இந்த உதவிகளை விடுவிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா ஏற்கெனவே கடந்த மாதம் இலங்கைக்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொகையை கொண்டு இந்தியாவிடம் இலங்கை எரிபொருட்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு குறைந்துவிட்ட நிலையில் உணவு, எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க இயலாத நிலை உள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM