புதுடெல்லி: கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு காப்புரிமை கோருவதற்கு 5 ஆண்டு வரை விலக்கு அளிக்கலாம் என ஐரோப்பிய யூனியன் பரிந்துரை செய்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே இரண்டு ஆண்டுகளாக நிகழும் தீர்க்கப்படாத பிரச்சினை காரணமாக இந்த பரிந்துரையை ஐரோப்பிய யூனியன் பரிந்துரை செய்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கான மருந்து மற்றும் நோய் கண்டறியும் கருவிகளுக்கு இந்த காப்புரிமை விலக்கு பொருந்தாது. இருப்பினும் இதுகுறித்து அடுத்த 6 மாதங்களுக்குள் விவாதித்து முடிவுசெய்யலாம் என ஐரோப்பிய யூனியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினால் வளரும் நாடுகளில் உள்ள பார்மசூடிகல்ஸ் நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிதயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு இதை உருவாக்கிய நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பு அனுமதி கோரி காத்திருக்க வேண்டியதில்லை.
இதுகுறித்து அடுத்த இரு வாரங்களுக்குள் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சலுகையால் இந்திய பார்மா நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்தியா உள்ளிட்ட வளரும்நாடுகளில் இன்னமும் லைசென்ஸ்கட்டுப்பாட்டு முறை உள்ளது. மேலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசின் அனுமதிக்குப் பிறகே அவற்றைத் தயாரிக்க முடியும். மேலும் அது காப்புரிமை பெற்றிருந்தாலும் அரசின் அனுமதிக்குப் பிறகே தயாரிக்க முடியும். காப்புரிமை சலுகை பெறும் வளரும் நாடுகள் 10 சதவீத அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யமுடியும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.