கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
9-ம் திருநாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, கழுகுமலை பேரூராட்சி தலைவர் சு.அருணா, துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆ.முருகன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோ ரதத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரும், சட்ட ரதத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமானும், வைரத்தேரில் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி ஸ்ரீ வள்ளி தெய்வானையும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முதலில் கோ ரதத்தையும் சட்ட ரதத்தையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த இரண்டு தேர்களும் காலை 11:30 மணிக்கு நிலையை அடைந்தன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கழுகாசலமூர்த்தி எழுந்தருளிய வைரத் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்கள், தெற்கு ரத வீதி, பேருந்து நிலைய ரோடு, கோயில் மேலவாசல் தெரு, தெற்குரத வீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் முருகன், மாரியப்பன் உட்பட கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி டிஎஸ்பி. உதயசூரியன் தலைமையில், காவல் ஆய்வாளர் ராணி மற்றும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நாளை (மார்ச் 18) தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசுக்காட்சியும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை (19-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (20-ம் தேதி) இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறுகிறது.