கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்த நடன சிகாமணி என்பவரின் மகன் அழகர். அதேபோல் சிறகிழந்த நல்லூரை சேர்ந்த மாணவி ஒருவர் சிதம்பரம்-சீர்காழி சாலையில் உள்ள ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், அழகர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட அழகர், இன்று தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அழகர் அந்த மாணவியை வாய்க்கு வந்தவாறு திட்டிவிட்டு, கல்லால் தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கல்லால் அடித்து விட்டு தப்பியோடிய அழகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.