காரைக்கால்: புகழ்பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலின் இன்று நடைபெற்ற பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள், அஸ்திரதேவர் அபிஷேகம், 6 மணிக்கு அஸ்திரதேவர் யாக பூஜையுடன் பிரகார புறப்பாடு, 7.30 மணிக்கு தேருக்கு புண்யாக வாஜனம், அஷ்டதிக் பலி பூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தேருக்கு யாக பூஜையுடன் எழுந்தருளியதும், மகா தீபாராதனைக் காட்டப்பட்டு காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, கட்சி பிரமுகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 20-ம் தேதி தொப்போற்சவம், 21-ம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.