காய்கறிகளை சரியாக கழுவ, சமைக்க என உங்கள் கிச்சனில் தினசரி போராடுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். காலிஃபிளவர் சுத்தம் செய்ய, கருணைக்கிழங்கு சமைக்க, பருப்பு வேகவைக்க என சில சமையல் குறிப்புகள் இங்கே உள்ளன. அடுத்தமுறை சமைக்கும்போது இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
காலிஃப்ளவர் சுத்தம் செய்ய
என்னதான் வெந்நீரில் கழுவி சுத்தம் செய்தாலும் ப்ரோக்கோலி மற்றும் காலிஃப்ளவரில், கண்ணுக்கு தெரியாத சிறு புழுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அதற்கு அவற்றை பூக்களாக பிரித்து, தண்ணீர் மற்றும் வினிகர் கரைசலில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்தால் புழுக்கள் வந்துவிடும். வினிகருக்கு பதிலாக கல் உப்பும் பயன்படுத்தலாம்.
சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மெழுகு பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை அப்படியே உட்கொள்ளும் போது, பல்வேறு உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும். அதற்கு’ மெழுகு பூசப்பட்ட பழங்களை தண்ணீர் மற்றும் வினிகரில் 8:1 என்ற விகிதத்தில் ஊறவைக்கவும்.
கருணைக்கிழங்கு சமைக்க
கருணைக் கிழங்கை எப்படி சமைத்தாலும், அதை சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். இதனால் அதன் சுவையை முழுமையாக அனுபவிக்க முடியாது. அடுத்தமுறை கருணைக்கிழங்கு சமைக்கும் போது’ கிழங்கை வெட்டிய பிறகு, . 10 நிமிடத்திற்கு அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு புளித் தண்ணீரில் வேக விட்டு எடுத்து’ சமைத்தால் சாப்பிடும் போது நாக்கு அரிக்காது.
காளான் ஃபிரெஷா இருக்க
நீங்கள் அடிக்கடி காளான் சமைப்பவரா? அப்படியானால் அது சீக்கிரமே கருத்து போவதை நீங்கள் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். காளான் புதிதாக இருக்க, அடுத்தமுறை சமைக்கும் போது’ அரை லிட்டர் தண்ணீரில் மைதா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து’ அதில் காளான் போட்டு வைத்தால் நீண்ட நேரம் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
பருப்பு வேகவைக்க
தினசரி சமைக்கும் பெண்களுக்கு பருப்பு வேகவைப்பது மிகப்பெரிய டாஸ்க். சில நேரங்களில் பருப்பு சரியாக வேகாது. சில நேரங்களில் கருகி விடும். பருப்பு நல்ல குழைந்து வருவதற்கு, வேகவைக்கும் போது’ கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கலாம். ஒரு துண்டு தேங்காயையும் சேர்த்து வேக வைத்தாலும் நன்றாக வெந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“