மதுரை: “செல்போன், சமூக வலைதளங்கள் மீதான மோகங்களை விட்டுவிட்டு, இளைஞர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும்“ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அ
அறிவுறுத்தினார்.
மதுரையில் தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது: “இந்தியா எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு. இந்தியப் பெண்கள் உலக மகளிருக்கு முன்னுதாரணமாக உள்ளனர். இந்தியாவின் கலாசாரம் உலகிற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் வாழ்வதற்கு கற்பித்த நூல் திருக்குறள்.
இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய பாக்கியமாகும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயரத்தை தொடலாம். சில விஷயங்களை சரியாக செய்யும்போது மட்டுமே அனைத்து இடத்திற்கும் செல்ல முடியும்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை இளைய சமூகத்தினர் வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இதுநாள்வைர நான் 20,000 புத்தகங்கள் வரை படித்துள்ளேன். என் அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தாலும் குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் முதல் உள்ளுர் வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். புத்தகங்களில் வாழ்க்கைத் தத்துவங்கள் நிரம்ப உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் தெரியாததை தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வேண்டும். இன்றைய இளம் வயதினர் செல்போன், சமூக வலைதளங்கள் மீதான மோகத்தை விட்டுவிட்டு புத்தகங்களை படிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.