கார்த்தியின் ‘சர்தார்’ இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்குவதற்கு முன்னரே, அல்லு அர்ஜூனின் ஆஹா (தமிழ்) ஒடிடி தளம் படத்தை 20 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
”சத்தமே இல்லாமல் பிசினஸில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளோம். தியேட்டருக்கு வருவதற்கு முன்னரே 20 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது ஒரு ரெக்கார்ட்.” என ‘2டி’யின் இணைதயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரபாண்டியன் ட்விட்டியிருக்கிறார். ‘சர்தார்’ படத்தை கார்த்தியின் ‘தேவ்’ படத்தை தயாரித்த லட்சுமணன் தயாரித்து வருகிறார். இவர் கார்த்தியின் நெருங்கிய நண்பராவார்.
‘இரும்புத்திரை’ மித்ரன், படத்தை இயக்கி வருகிறர். இதில் அப்பா- மகன் என இரண்டு வேடத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்கிறார்கள். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள் தவிர சிம்ரன், முனீஸ் காந்த், முரளி ஷர்மா, இளவரசு என பலரும் நடித்து வருகின்றனர். இரண்டு கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு, மூன்றாவது ஷெட்யூலை மைசூரில் முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதுபற்றி படக்குழுவில் விசாரித்தோம். ” படம் தியேட்டர் ரிலீஸ் தான். ஒடிடிக்கு 20 கோடிக்கு விற்றிருக்கிறது என்றவுடன் பலரும் நேரடியாக இது ஒடிடியில் வெளிவரும் படம் என நினைத்துவிட்டார்கள். படத்தின் பட்ஜெட் 60 கோடி. அப்படியிருக்கையில் பிசினஸ் இனிமேல்தான் இருக்கிறது. இந்தப் படம் தியேட்டருக்கு வந்து மூன்று வாரம் ஆன பிறகே ஒடிடியில் வரும்” என்கிறார்கள்.
இதற்கிடையே ஏப்ரலில் ‘சர்தார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்து ராஜூமுருகன் இயக்கவுள்ள படத்திற்கு செல்லவிருக்கிறார் கார்த்தி.