உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
நோட்டோவில் உக்ரைன் விரும்பிய நிலையில் அதை எதிர்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் திகதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர். குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை துவங்கினர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு உயரதிகாரிகளுக்கு இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.
இது குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறுகையில், ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள பேச்சுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சில உத்தரவாதங்களுக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், மறுபுறம், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில், ரஷ்ய படைகளின் கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.