சீனா, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா; இந்தியாவில் 4வது அலை அறிகுறி இல்லை.! உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் நான்காவது அலைக்கான அறிகுறி இல்லை என்று ஒன்றிய அரசின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா ெதாற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். வரும் மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் சேவை தொடங்க உள்ளதால், இத்திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொற்றுநோய்  மேலாண்மை குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக உயர்மட்ட அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து கோவிட்  பணிக்குழுவின் தலைவரான டாக்டர் நரேந்திர குமார் கூறுகையில், ‘இந்தியாவில்  கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்தியாவிற்கும் மற்ற  நாடுகளுக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கொரோனா தொற்றுநோயில்  இந்த சமத்துவமின்மையின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஆரம்பத்தில்  இருந்து தற்போது வரை, கொரோனா வைரஸ் பரவல் நோய் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விளைவை ஏற்படுத்தி உள்ளது. வைரஸின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளூர் மற்றும் சர்வதேச  கண்காணிப்பு முறையை பின்பற்றி வருகிறோம்.  இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், உருமாற்றம் அடைந்த வைரஸ் இன்னும் கண்டறியவில்லை. மரபணு வரிசைமுறையின் போது வைரஸில் எந்த  மாற்றமும் இல்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் நான்காவது அலைக்கான அறிகுறிகள் இல்லை. இருந்தும் மூன்று வகையான நடைமுறைகளை பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கண்காணிப்பை அதிகரிப்பது, மரபணு வரிசைமுறை அதிகரித்தல், அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.