கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வருவது என்றால் பல்வேறு சுங்க சாவடிகளை கடக்க வேண்டிய நிலை உள்ளது.
சட்டமன்ற உறுப்பினரான என்னிடமே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்துவதாக கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் உள்ளது. அவை பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் நகர்ப்புறப் பகுதிகளில் 14 சுங்க சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்க சாவடிகளில் உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய ஐந்து சுங்க சாவடிகளை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. அதை அகற்ற முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கூட்டத் தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் எ வ வேலு, ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை வலியுறுத்தி உள்ளார்.