ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு அழைப்பு: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி:
இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
57 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த அமைப்பின் 48-வது மாநாடு பாகிஸ்தானில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. 

அதற்கு முன்னதாக இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஜம்மு-காஷ்மீரின் பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாட்டின் தலைவர் மசரத் ஆலம் பட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பயங்கரவாதம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  ஊக்குவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 
இந்தியாவின் ஒற்றுமையை மற்றும் நமது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதை நேரடியாக நோக்கமாகக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளை இந்திய அரசு மிகவும் தீவிரமாக கருதுகிறது. 
இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்காக இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள,இது போன்ற பிரிவினைவாதிகளை அனுமதிப்பதை இஸ்லாமிய  ஒத்துழைப்பு அமைப்பு தவிக்க வேண்டும் என்றும் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.