தனது பெயரை டாட்டூ குத்திய இளைஞர் ஒருவரை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரிடம் நீண்டநேரம் பேசியிருக்கிறார்.
இந்தியாவின் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட சன்னி லியோன் சிறு வயதிலேயே குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார். அங்கேயே தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு, மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர், அதை நோக்கி பயணிக்க தொடங்கிய சன்னி லியோனுக்கு, ஆபாசப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அதுபோன்ற படங்களில் நடிப்பதையை தனது தொழிலாக மாற்றிக் கொண்ட அவர், ஒருகட்டத்தில் உலக அளவில் புகழ் பெற்றார்.
ஆனால், திடீரென சில வருடங்களுக்கு முன்பு ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சன்னி லியோன், இந்தியாவுக்கு குடிபெயர்ந்து பாலிவுட் திரைப்படங்கள் மீது தனது கவனத்தை செலுத்தினார். தற்போது பாலிவுட் மட்டுமல்லாமல் பிற இந்திய மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று சென்ற சன்னி லியோனை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு ரசிகர், சன்னி லியோனிடம் ஓடி வந்து அவரது கையை காட்டினார். அதில், சன்னி லியோனின் பெயர் டாட்டூவாக குத்தப்பட்டிருந்தது.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த சன்னி லியோன், அந்த ரசிகரிடம் நீண்டநேரம் பேசினார். பின்னர், அங்கிருந்த ஒரு நபரை வீடியோ எடுக்குமாறு கூறிய சன்னி லியோன், “மிகவும் அற்புதமாக இருக்கிறது… மிக்க நன்றி” என அந்த ரசிகரிடம் கூறுகிறார். அந்த வீடியோவுக்கான கேப்ஷனில், “நீங்கள் எப்போதும் என்னை காதலித்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு உங்களுக்கு வாய்ப்பு இல்லை. சீக்கிரம் ஒரு நல்ல மனைவியை கண்டுபிடியுங்கள்” என அதில் சன்னி லியோன் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.