புதுடெல்லி: தமிழகத்தின் கேந்திரிய வித்தியாலாயா பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்பும்படி மத்திய அரசிடம் அதிமுக எம்.பியான பி.ரவீந்திரநாத் மக்களவையில் வலியுறுத்தினார்.
இது குறித்து தேனி எம்.பியான ரவீந்திரநாத் நேற்று மக்களவையின் பூஜ்ஜியநேரத்தில் பேசியது: ”பிப்ரவரி 1, 2022 தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 58 முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 139 , பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 471 மற்றும் 575 முதன்மை ஆசிரியர்கள், பல ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் இடங்களும் காலியாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுகிறேன். இதற்காக எனது இவ்வறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். மேலும், பள்ளிகளில் 10 முதல் 15 சதவிதத்திற்கு மேல் தற்காலிக ஆசிரியர் பணியாளர்கள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும், தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் பெரும்பாலும் ஒப்பந்த ஆசிரியர்களையே சார்ந்திருக்கின்றன. மாணவர்களின் கற்றல் மற்றும் அவர்களின் திறமையை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கற்பிக்கும் திறன், அவர்களின் உந்துதல், மன உறுதி மற்றும் கற்பிப்பதற்கான அவர்களின் தயாரிப்பு ஆகியவற்றின் பிணைப்பினைப் பெரிதும் சார்ந்துள்ளது.
ஒப்பந்த ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் கல்விப்பணிகளில் தொடர்ச்சி இல்லாதது மாநிலத்தில், குறிப்பாக ஆரம்ப வகுப்புகளின் கல்வித்தரத்தில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அவர் பேசினார்.
’சேமிப்புக் கிடங்குகளில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை’
ரவீந்திரநாத் மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றில், ”248 இடங்களில் அமைக்கப்படும் எஃகு சேமிப்புக் கிடங்குகளில் மாநில வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் அரசிடம் உள்ளதா? இதற்கான ஒதுக்கீட்டு அளவுகோல்கள் என்ன? இந்த நவீன எஃகு சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக இந்திய உணவுக்கழகத்திற்கு பிராந்தியம் வாரியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு? இதில், தமிழ்நாட்டில் அமைபவை எத்தனை?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ”ஒரு மாநிலத்தில் உருவாக்கப்பட வேண்டிய சேமிப்புக் கிடங்குகளின் திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் இடைவெளி மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. கொள்முதல் செய்யும் பகுதிகளில் மூன்று வருட உச்ச கையிருப்பு நிலை இருக்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) விகிதம், நுகர்வு மாநிலங்களில் கோதுமை ஒதுக்கீட்டின் விகிதம் ஆகியவற்றுடன் இடையக விதிமுறைகளை விநியோகித்தல் இருக்க வேண்டும்.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் 17.75 மாதங்கள் அல்லது கோதுமை மற்றும் 4 மாத அரிசி ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் சேமிப்புத் திறனுக்கான தேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் பொது மற்று தனியார் பங்களிப்பு முறையில் முன்மொழியப்பட்டன. இதில், கோதுமை சேமிப்புக் கிடங்குகள் மட்டுமே முன்மொழியப்பட்டதால், தமிழகத்திற்கு எந்த தளமும் திட்டமிடப்படவில்லை” எனப் பதிலளித்தார்.