சென்னை: தமிழகத்தின் 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை நாளை (மார்ச் 18) காலை 10 மணிக்கு கூடுகிறது.
ஆண்டுதோறும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து, அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அரசால் தாக்கல் செய்யப்படும். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு மார்ச்மாதத்துக்குப் பதில் பிப்.1-ம் தேதியே நாடாளுமன்றத்தில் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடங்கியது. இதையடுத்து, அடுத்த சில தினங்களில்தமிழக அரசும் அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி, அதிமுக அரசுதனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாத்தியமான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. முன்னதாக இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘மார்ச்18-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அன்று அலுவல்ஆய்வுக்குழு கூடி, பேரவைக் கூட்டத்தைஎத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.
திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல்முறையாக தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டுதாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்,கரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசைப் பொறுத்தவரை, பத்திரப்பதிவு, வணிகவரி, ஆயத்தீர்வை வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. ஒரே நாடு ஒரேபதிவு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில்பத்திரப்பதிவு வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதைச் சரிகட்டி, வரி வருவாயைப் பெருக்கும் வகையில் புதிய திட்டங்களும்நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, இம்மாதம் 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கைதிட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. அப்போது, மாதந்தோறும் மின்கட்டண முறையைஅமல்படுத்துவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அதை அமல்படுத்தினால் இழப்பு ஏற்படுமா என்றும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
அதேபோல், மகளிருக்கு மாதம் ரூ.1000உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்அறிவித்திருந்தார். இவை தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.