காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்த நிலையில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கடந்த 7 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் சுமார் 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு 475 ஊடகங்களில் 290 மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் ஆர்.எஸ்.எப். அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில், ஆப்கானிஸ்தானில் கடந்த 7 மாதங்களில் 43 சதவீத ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 60 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தேசிய ஊடகவியலாளர் சங்கத் தலைவர் சாயித் யாசீன் மதீன் கூறுகையில், ஊடகங்கள் பெருமளவில் மூடப்பட்டதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்களின் இடப்பெயர்வே காரணம் என்று கூறினார்.
மேலும் பொருளாதாரா நெருக்கடிகளை தாண்டி வெளிநாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்று காமா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.