புதுடில்லி: தவறுதலாக ‘பிரமோஸ்’ ஏவுகணை செலுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இந்தியா மீது ஏவுகணையை வீச தயார் நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி பராமரிப்பு பணிகளின்போது, நம் நாட்டின் பிரமோஸ் ஏவுகணை ஒன்று தவறுதலாக பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்துக்கு, பாக்., கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பார்லிமென்டில் விளக்கம் அளித்தார். அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ராஜ்நாத் சிங், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த சம்பவத்தால் பாக்.,கில் ஏற்பட்ட சூழல் குறித்து, பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய விமானப் படையால் தவறுதலாக செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பாக்.,கில் விழுந்தது. அதில், சில குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
ஏவுகணை செலுத்தப்பட்டது குறித்து, பாக்., ராணுவத்திடம் இந்திய ராணுவத்தினர் உடனடியாக தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஏவுகணையை செயலிழக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த பாக்., அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா மீது ஏவுகணையை வீச தயார் நிலையில் இருந்தது. எனினும், அது தவறுதலாக செலுத்தப்பட்டதை அறிந்து, தன் தாக்குதல் முடிவில் இருந்து பாக்., பின்வாங்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement