புதுடெல்லி: இந்தியாவில் நேற்று 60 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். ஆனால், 20 மாநிலங்களில் கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. நாடு முழுவதும் இதுவரை 5,16,132 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதில் 1,43,759 பேருடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 38,024 பலி எண்ணிக்கையுடன் 4வது இடத்தில் உள்ளது.நாட்டில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. அதே போல், பலி எண்ணிக்கை, இறப்பு விகிதமும் குறையத் தொடங்கி உள்ளது. இறப்பு விகிதம் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 1.20 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் நேற்று 60 பேர் பலியானதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 2 பேரும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலில் தலா ஒருவரும் என மொத்தம் 60 பேர் பலியாகி உள்ளனர். மற்ற 20 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லை. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கை:* நேற்று புதிதாக 2,539 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,01,477 ஆக உள்ளது.* நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30,799 ஆக உள்ளது.* கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர். இதில், 50 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.* இஸ்ரேலில் புதிய வைரஸ்உலகம் முழுவதும் 2வது அலையின்போது உருவான டெல்டா வைரஸ், பல லட்சம் மக்களை பலி வாங்கியது. கடந்தாண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவியது. இப்போது இது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் ஒமிக்ரானின் 2 துணை வகைகள் ஒன்று சேர்ந்து பயங்கரமான புதிய உருமாற்ற வைரஸ் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்துக்கு வந்த 2 பயணிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புதிய உருமாற்ற வைரஸ், மற்ற நாடுகளில் இன்னும் தென்படவில்லை.