திருப்பதியில் தும்பூரூ தீர்த்தம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான தும்பூரூ தீர்த்தம் முக்கோட்டியில் இன்றும், நாளையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி கூறியதாவது, இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும் நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரையும் தும்பூரூ தீர்த்தத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த சூழ்நிலையிலும் இன்று இரவு தும்பூரூ தீர்த்த யாத்திரைக்கு அனுமதி இல்லை.அன்ன பிரசாதம் துறை சார்பில் பாபவிநாசம் அணை அருகே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படும்.

பாபவிநாசம் அணை அருகே முதலுதவியும், 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உணவருந்த ஏதுவாக தும்பூரூ தீர்த்தம் செல்லும் வழியில் ஆங்காங்கே சாலையோரங் களில் குடிநீர் குழாய்கள், ஏணிகள், தடுப்பு வேலிகள், இரும்பு ஏணிகள், கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் சமையல் பாத்திரங்கள் கற்பூரம், தீச்சட்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சுகாதாரத்துறையின் கீழ் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை, வனத்துறை மற்றும் விஜிலன்ஸ் துறையினர் ஒருங்கிணைந்து பாபவிநாசம் முதல் தும்பூரூ தீர்த்தம் வரை பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியாளர்களை நியமித்து பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியை சேர்ந்த நாகபூ‌ஷணம், சண்முகம், மஞ்சுளா, குப்பையா ஆகிய 4 பக்தர்கள் ரூ 300 டிக்கெட்டில் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து இலவச லட்டு பெறுவதற்காக 29-வது கவுண்டருக்கு சென்றனர்.

அங்கு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்த ஊழியர் 2 லட்டுக்களை கொடுத்துவிட்டு 2 டிக்கெட்டுக்கான லட்டுகளை ஏற்கனவே வாங்கி சென்று விட்டதாக தெரிவித்தார். நாங்கள் இப்போதுதான் தரிசனம் செய்து விட்டு வருகிறோம். எனவே எங்களது லட்டுக்களை யாரும் வாங்கி சென்றிருக்க முடியாது என பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் லட்டு வழங்கும் கவுண்டர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

திருப்பதியில் நேற்று 64,368 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,179 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.