திருப்புவனம் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவைசிகிச்சையில் ஆண்குழந்தை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இளையான்குடி அருகே கீழாயூர் கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் மனைவி ராஜேஸ்வரி (37). மாற்றுத் திறனாளியான ராஜேஸ்வரிக்கு முதல் பிரசவம் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்துள்ளது. குழந்தையின் எடை ஒரு கிலோ அளவில் இருந்த நிலையில் மூன்று மாதத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. வெளிநாட்டில் கூலிவேலை பார்த்து வந்த நாச்சியப்பன், ஏமாற்றப்பட்டு இளையான்குடி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உடல் நலமின்றி உயிரிழந்துள்ளார். இதற்கிடையே இரண்டாவதாக ராஜேஸ்வரி கர்ப்பமுற்றார்.
image
ஆதரவின்றி தவித்த ராஜேஸ்வரியை திருப்புவனம் அருகே ஆலங்குளம் கிராமத்தில் வசிக்கும் அவரது சகோதரி தேவி அழைத்துவந்து பராமரித்து வருகிறார். அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தொடர்ச்சியாக பரிசோதனையும் மேற்கொண்டு வந்துள்ளார். வரும் 27ம் தேதி பிரசவத்திற்கு தேதி குறித்த நிலையில் நேற்று திடீரென வயிற்று வலி ஏற்படவே திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பொதுவாக மாற்றுத் திறனாளிக்கு பிரசவம் சிக்கலாகும் என்பதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வது வழக்கம்.
image
ஆனால் முதன்முறையாக திருப்புவனத்தில் ராஜேஸ்வரிக்கு அறுவைசிகிச்சை செய்ய டாக்டர் ஸ்ரீவித்யா தேவி தலைமையிலான குழுவினர் முடிவுசெய்ததின்பேரில், இன்று காலை அறுவைசிகிச்சை மூலம் மூன்று கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மருத்துவர்கள் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.  திருப்புவனம் அரசு மருத்துவமனை உருவாக்கப்பட்டதில் இருந்து மாற்றுதிறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில்லை. தற்போது ராஜேஸ்வரிக்கு முதன்முறையாக அறுவைசிகிச்சை மூலம் நல்ல ஆரோக்யத்துடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் அரசு மருத்துவமனையில்தான் அதிகளவில் பிரசவம் நடைபெறுகிறது. மாதத்திற்கு குறைந்தபட்சம் 60 பெண்களுக்கு பிரசவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
image
முதன்முறையாக மாற்றுத் திறானாளிக்கு அறுவைசிகிச்சை செய்து குழந்தை பிறந்ததையடுத்து மருத்துவர்கள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ராஜேஸ்வரி தரப்பில் கூறுகையில் கணவரும் இறந்த நிலையில், போதிய வருவாய் இன்றி தவித்து வருகிறோம்; தமிழக அரசு உதவி கரம் நீட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.