மும்பை உல்லாஸ் பகுதியை சேர்ந்தவர் பப்பு குமார் ஷா(26). பீகாரை சேர்ந்த ஷா கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். ஷா அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலியை திருமணம் செய்து கொள்ள காதலியின் தந்தையான கமல்ஜித் என்பவரிடம் சென்று நேரடியாக பெண் கேட்டார் ஷா. ஆனால் கமல்ஜித் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஷா, பெண் கேட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் ஷா சிறப்பு பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தனது காதலியின் தந்தைக்கு அழைப்பு விடுத்தார். காதலியின் தந்தை கமல்ஜித்தும் பார்ட்டியில் கலந்து கொண்டார். பார்ட்டியில் அனைவரும் நல்ல குடிபோதையில் இருந்த போது கமல்ஜித்தை ஷா ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று, “எனக்கு உனது மகளை திருமணம் செய்து கொடுக்கமாட்டாயா” என்று கேட்டு கமல்ஜித்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் ஷா தனது காதலிக்கு போன் செய்து, “உனது தந்தை இனி வீட்டிற்கு வரவே மாட்டார். அவரை கொலை செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார். இது குறித்து உடனே அப்பெண் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ஷாவை கைது செய்து கமல்ஜித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கைது செய்யப்பட்ட ஷாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.