தேர்தல் இன்றி ஜனாதிபதியாக பதவி ஏற்கப்போகும் பசில்! இரகசிய திட்டம் வெளியானது



ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வர பசில் ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமான தரப்பினரும் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நாட்டில் நிலவும் நெருக்கடியை உச்சமடைய செய்யும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை தாங்க முடியாது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிடுவார் என நம்புகிறேன்.

அத்துடன் பிரதமர் தற்போது நல்ல நிலைமையில் இல்லை. இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மக்களின் கருத்தை அறியும் தேர்தலுக்கு செல்லாமல் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு பசில் ராஜபக்ச திட்டமிட்டு வருகிறார்.

ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியும். ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள். அவர்கள் பசில் ராஜபக்சவையே ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். அப்போது பசில் ராஜபக்ச தேர்தல் இன்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இரட்டை குடியுரிமை பெற்றவரிடம் நாட்டின் ஜனாதிபதி பதவி செல்லும். அவரிடம் இருக்கும் திட்டம் அதுதான். ராஜபக்ச சகோதரர்களுக்கு இது புரிந்தும் புரியாதவர்கள் போல் இருக்கின்றனர். அது சகோதர பாசம். ஏனைய ராஜபக்ச சகோதரர்கள் போன்றவர் அல்ல பசில் ராஜபக்ச.

முட்டையும் பசில் ராஜபக்சவும்

சிறிய வயதில் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்ச நுகேகொட பகுதியில் ஆசிரியர் ஒருவரின் விடுதியில் தங்கி படித்து வந்தனர். அந்த ஆசிரியை மகிந்த ராஜபக்சவை விட பசில் ராஜபக்ச மீது அதிகம் பற்று கொண்டிருந்தார்.

அந்த ஆசிரியை பசில் ராஜபக்சவின் உணவில் மாத்திரம் முட்டையை வைத்து பரிமாறுவது வழக்கம். ஒரு முட்டை இருக்கின்றது, சரியானால், அதனை மற்றைய சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும் எனினும் பசில் ராஜபக்ச என்ற அந்த சகோதரர், சோற்றில் முட்டை மூடி மறைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு அந்த முட்டை கிடைத்து இருந்தால், அதனை பகிர்ந்து தம்பிக்கு கொடுத்து விட்டு சாப்பிட்டிருப்பார்.

பசில் ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி திஸாநாயக்கவுடன் இருக்கும் காலத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலிலும் போட்டியிட்டவர்.

உண்மையான பாசம் உள்ள சகோதரராக இருந்தால், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அவருக்கு தெரியாமல் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருப்பாரா?.

அப்படியான சகோதருக்காவே இவர்கள் அனைத்தையும் இழந்து வருகின்றனர்” எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.