நவீன மற்றும் தன்னிறைவு இந்தியாவே இலக்கு: பிரதமர் அறிவுரை| Dinamalar

புதுடில்லி: நமது நாட்டை நவீன மற்றும் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றுவதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமியில், பயிற்சி பெறும் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த புதிய உலகத்தில், நமது பங்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில், நீங்கள் மாவட்ட அளவில் அல்லது வேறு எந்த துறையில் நிர்வாகம் செய்தாலும், தன்னிறைவு இந்தியா மற்றும் நவீன இந்தியா என்ற இலக்கை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும். இதனை எப்போதும் மறந்து விடக்கூடாது. கடைசியில் இருக்கும் நபரையும் மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும். கோப்புகள் மற்றும் நிகழ்வுகள் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

எந்த ஒரு முடிவும் எடுக்கும் முன்னரும், கடந்த காலங்களில் என்ன நடந்தது என்ற அடிப்படையையும், அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவசர கதியில் முடிவு எடுக்காதீர்கள். சவாலான திட்டங்களை கையில் எடுக்க வேண்டும். உங்களுக்கு ஏற்றவாறு எடுத்து கொள்ளக்கூடாது. இந்த பயிற்சி மையத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் நிர்வாகம் தொடர்பான படிப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.