புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த நிலக்கரி ஊழல், பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி, பல நூறு கோடி ரூபாயை சட்ட விரோதமாக பெற்று உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவர் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும், அவரது மனைவி ருசிச்ராவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. தாங்கள் மேற்கு வங்கத்தில் குடியிருப்பதால் டெல்லியில் ஆஜராக அழைப்பு விடுக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி இந்த 2 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அபிஷேக் பானர்ஜிக்கும், ருசிச்ராவுக்கும் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நேற்று மீண்டும் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
