ஓசூர் அருகே பேருந்து நிலையம் என்று சொல்லப்படுகிற இடத்தில் மேற்கூரை இன்றியும், பொதுமக்கள் அமர இடம் மற்றும் குடிக்க தண்ணீர் வசதி இன்றியும் பொதுமக்கள் தவத்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான வசதி செய்து கொடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ந்துவரும் தொழில் நகரமான ஓசூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாகலூர். இது தமிழக – கர்நாடக எல்லைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள பகுதி என்பதால் இரு மாநிலத்தில் இருந்தும் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலைக்கு செல்வதற்கும் இந்த பாகலூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். அதேபோல பெங்களூரில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் ஒசகோட்டை போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளுக்கு செல்லவும் இந்த சாலை பயன்படுகிறது.
இந்த நிலையில், பாகலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கும் முன்பு ஏற்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் போன்ற ஒரு காலி இடம் மட்டும் உள்ளது. இங்கு அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன. ஆனால் இங்கு அடிப்படை வசதிகளான நிழல் குடை, குடிநீர், கழிவறை போன்ற ஏதுமில்லை. பொதுமக்கள் அமர்வதற்குக்கூட எந்தவிதமான வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இயற்கை உபாதைகளுக்கு வேறு இடம் தேடிச்செல்லும் அவலநிலையில் உள்ளனர்.
எனவே இந்தப் பகுதிக்கு தற்போது பேருந்துகள் வந்து செல்கின்ற இடத்தை முழு கட்டமைப்புடன் கூடிய பேருந்துநிலையமாக மாற்றி, அங்கு அடிப்படை வசதிகளான நிழல் குடை குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM