புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் நடந்த விழாவில் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகவந்த் சிங் உறுதி அளித்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான், சங்ருர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டியைவிட 58,206 வாக்குகள் அதிகம் பெற்று பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில் பதவியேற்பு விழா நடக்கும் என்று ஆம் ஆத்மி அறிவித்தது.
அதன்படி, கட்கர் கலன் கிராமத்தில் நேற்று பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. காலை 9 மணி முதலே விழா நடக்கும் இடத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரத் தொடங்கினர். லட்சத்துக்கும் மேற்பட்டோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. பஞ்சாபின் 17-வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வரைத் தவிர வேறு அமைச்சர்கள் யாரும் நேற்று பதவியேற்கவில்லை. வரும் சனிக்கிழமை ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பதவியேற்ற பிறகு பகவந்த் மான் பேசும்போது, ‘‘புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கர்வமாக நடந்து கொள்ளக் கூடாது. நமக்கு வாக்களிக்காதவர்களையும் மதித்து நடக்க வேண்டும். பஞ்சாபில் வெற்றியை தேடித் தந்த அனைவருக்கும் நன்றி. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாபில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை, ஊழல், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆண்கள் மஞ்சள் டர்பன் அணிந்தும், பெண்கள் மஞ்சள் துப்பட்டா அணிந் தும் வரவேண்டும் என்று பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, விழாவில் பங்கேற்றவர்கள் மஞ்சள் டர்பனும் துப்பட்டாவும் அணிந்து வந்திருந்தனர். பகவந்த் மான், மஞ்சள் டர்பன் அணிந்து பதவியேற்றார். (சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், மஞ்சள் டர்பன் அணிவது வழக்கம்).
பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த நாள் மிகப் பெரிய நாள். இது புதிய நம்பிக்கைக்கான பொன்னான விடியல். பஞ்சாப் மக்கள் அனைவரும் இன்று ஒன்றிணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக சபதம் எடுப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் வாழ்த்து
பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்கும் நாம் இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். மொழியுரிமை மற்றும் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்து குரல் எழுப்புவதில் தமிழகத்துக்கும் பஞ்சாபுக்கும் இடையே நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.