பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.