பங்குனி பொங்கல் விழா நெருங்குவதால் புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், இன்று கூடிய வாரச்சந்தையில் வழக்கம்போல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. மாசி மாதம் ஆடு விற்பனை மந்தமாக இருந்த நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுவர்.
இதற்காக ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்க காலை முதலே குவிய துவங்கினர். இன்று கூடிய சந்தைக்கு 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் 400க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேசமயம் விற்பனைக்கு வந்த ஆடுகளின் விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்ந்தது விற்பனையானது.
குறிப்பாக கடந்த வாரம் 10 கிலோ வரையிலான வெள்ளாட்டு கிடாய் 6000 ரூபாய் வரை விற்பனையானது. இன்று அதே எடை கொண்ட வெள்ளாடு 6500 ரூபாய் வரை விற்பனையானது. மாசி மாதம் முடிந்து பங்குனி துவங்கி உள்ளதால் சென்றவாரத்தை விட இந்த வாரம் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், பங்குனி பொங்கல் வருவதால் இந்த வாரம் வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கிடா 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து ஆடுகளும் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM