அகமதாபாத்:
குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வகானி தெரிவித்துள்ளார்.
பகவத் கீதையை அறிந்து கொள்ளவும்,மாணவர்களிடையே அது குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்புவரை பாடத் திட்டங்களில் கதைகள் மற்றும் பாராயணம் போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு [மாணவர்களுக்கு] பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர், கதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், வினாடி வினாக்கள் போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும்.
ஒலி-ஒளி வடிவில் பகவத் கீதை பாடத் திட்டம் அச்சிடப்பட வேண்டும்.இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளழது.
பாஜக அரசின் இந்த நடவடிக்யை குஜராத் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹேமங் ராவல், பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்கும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் குஜராத் அரசும் பகவத் கீதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகம் உள்ளனர், பல மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களுக்காக அரசு ஏதாவது செய்யும் என்று நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.
குஜராத் அரசின் முடிவை வரவேற்பதாக அம்மாநில ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…சென்னையில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்