Congress MP Manickam Tagore complaining Annamalai to Modi viral video: தமிழகத்தில் சிறுவர்களின் தற்கொலையை வைத்து பிண அரசியலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்கிறார் என்றும், அவருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்க வேண்டும் என்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நடைபெற்று வருகிறது. இதில் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.,மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலமாக உள்ளது. நாங்கள் மத நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் கொண்டாடுகிறோம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரு புதிய அரசியல் தலை தூக்குகின்றது. தமிழகத்தில் பிண அரசியல் தொடங்கி உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் கர்நாடகாவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தமிழகத்திற்கு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி, சிறுவர்களின் தற்கொலைகளை வைத்து அரசியல் செய்கிறார். சமூகத்தை பிரிக்க எண்ணுகிறார். தவறான தகவல்களை பரப்புகிறார்.
தற்கொலை செய்து கொண்ட சிறுவர்களோடு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதன் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயல்கிறார். மதுரையிலும் தஞ்சாவூரில் இதே வேலையை அவர் செய்தார். இது பிரிவினையை உருவாக்குகின்றது. நான் உங்கள் மூலமாக கோரிக்கை வைக்கின்றேன். பிரதமர் மோடி அவரது கட்சி உறுப்பினரிடம் இது போன்ற அரசியல் செய்யக் கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறினார்.
இதையும் படியுங்கள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ்; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் தமிழக காங்கிரஸ் – பாஜக
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு எம்.பி ஒருவர் இன்று பாராளுமன்றத்தில் என்னைப் பற்றியும், தமிழக பாஜக குறித்தும் புகார் செய்வதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் நமது நாட்டிலிருந்து அழிந்து வருகிறது. இப்போது சபாநாயகரிடம் புகார் அளிப்பது மூலம் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் பொன்னான நேரம் நேரத்தை வீணடிக்க விரும்புகிறது. அவர்கள் விரைவில் வளர்வார்கள் என்று நம்புகிறேன்! என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அரியலூரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அவர் படித்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் கொடுத்த மதமாற்ற அழுத்தமே காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் நல ஆணையம் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.