மேலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ரஷிய அதிபர் புதின் போர்க் குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் புதின் ஒரு போர் குற்றவாளி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் பேட்டி அளித்தபோது நிருபர் ஒருவர் புதினை நீங்கள் போர் குற்றவாளி என்ற நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு ஜோ பைடன் இல்லை என்று கூறினார்.
ஆனால் சில நிமிடத்தில் பதிலை மாற்றிய ஜோ பைடன் என்னை கேட்டால் புதினை நான் போர் குற்றவாளி என்றுதான் கூறுவேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
உக்ரைனில் பயங்கரமான பேரழிவையும், திகிலையும் ரஷிய அதிபர் புதின் ஏற்படுத்தி இருக்கிறார். அடுக்குமாடி கட்டிடங்கள், மகப்பேறு ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசப்படுகின்றன. ரஷிய படைகள் நூற்றுக்கணக்கான டாக்டர்களையும், நோயாளிகளையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவை எல்லாம் அட்டூழியங்கள். இது உலகத்திற்கே ஆத்திரத்தை ஏற்படுத்த கூடியது.
உக்ரைனுக்கான எங்கள் ஆதரவில் உலகம் ஒன்று பட்டு உள்ளது. உக்ரைனை தாக்கியதற்காக புதின் மிக கடுமையான விலையை செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதினை போர் குற்றவாளி என்று ஜோ பைடன் விமர்சித்தது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. அதில், “ஜோ பைடன் தனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். புதின் ஒரு போர் குற்றவாளி என்பதை ஆழ் மனதில் இருந்து சொல்லி உள்ளார். உக்ரைன் போரில் நடந்த விஷயங்கள், புகைப்படங்களை பார்த்து விட்டு ஜோபைடன் இதை தெரிவித்து இருக்கிறார்” என்று விளக்கம் அளித்து உள்ளது.
இதற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறும்போது, “ஜோ பைடன் சொன்னது மிக மிக தவறானது. அவர் பேசியது மன்னிக்க முடியாத தவறான கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவர் இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நாட்டின் (அமெரிக்கா) குண்டுகள் பல நாடுகளில் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது என்பதை மறுக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.