புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதிகளில் வாகனங்களை வீதிகளில் எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு ஏலம் வரும் 25ல் நடக்கவுள்ள சூழலில் ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. வாகனங்களை நிறுத்தவே இடமில்லை. இந்நிலையில், சாலையோரங்களில் டூ-வீலர் தொடங்கி வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க புதுச்சேரி நகராட்சி முடிவு எடுத்துள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்வைப்பு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளோருக்கு மின்னணு ஏலம் வரும் 25-ல் நடக்கிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மார்ச் 31 வரை ஒப்பந்த உரிமம் சம்பந்தப்பட்டோரிடம் இருக்கும். குறிப்பாக அரவிந்தர் ஆசிரமம், மணணக்குள விநாயகர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாசாலை, நேரு வீதி,புதிய பஸ்நிலையம் ழைய துறைமுகச்சாலை என நகரில் எங்கு நிறுத்தினாலும் கட்டணம் இதன்மூலம் வசூலிக்கப்படும்.
தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியது: ”புதுவை நகரப் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடும் அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது தவறான ஒன்றாகும். நகர பகுதியின் தற்போதைய சாலை உட்கட்ட அமைப்பில் உள்ள குளறுபடிகளால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் தினந்தோறும் அல்லல் படுகின்றனர். இதன் மூலம் தினசரி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும், கேளிக்கை வரி, கேபிள் டிவி வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள், நகர்ப்புற வளர்ச்சி வரி, உள்ளிட்ட பல வரிகள் மூலம் திரட்டப்படுகின்ற வரியை முறைப்படுத்தி வசூலித்தாலே நகராட்சிக்கு அதிகப்படியான வரியின் மூலம் நிதி கிடைக்கும்.
தற்போது தனியார் பள்ளிகளிடம் சொத்து வரி, உள்ளாட்சி நிர்வாகம் வசூலிப்பது இல்லை. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் அமுல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவில் வருவாய் வரும். பல தனியார், வர்த்தக வியாபார நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், போதிய பார்க்கிங் வசதியின்றி நடத்த அனுமதி வழங்குவதால், அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. மக்களை பாதிக்கும் புதுவை நகராட்சியின் வாகன நிறுத்தம் கட்டண வசூல் உத்தரவை முதல்வர் மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக தேர்தல் பிரிவு செயலர் வையாபுரி மணிகண்டன் கூறுகையில், “சர்வாதிகார நாட்டில்கூட விதிக்கப்படாத கட்டணத்தை அரசின் ஒப்புதலோடு, புதுவை நகராட்சி விதிக்க முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. நகராட்சியின் வருமானத்தை பெருக்க ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது கட்டணத்தை திணித்து அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது. பல கோடி ரூபாய் பாக்கியுள்ள கேபிள் டிவி உட்பட கேளிக்கை வரிகள், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பல நூறு கோடி நகராட்சி இடங்களுக்கான வரி பாக்கி உட்பட நிலுவை வரியை வசூலிக்க உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஏழை மக்களின் மீது வரியை திணித்து வசூலிக்க நினைப்பது நயவஞ்சக செயல்.
புதுவை சிறிய நகர பகுதி. அரசு போக்குவரத்து வசதியும் இல்லை. அடுத்தடுத்த வீதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஒவ்வொரு வீதிக்கும் வாகன நிறுத்த கட்டணம் செலுத்த முடியுமா? நேரு வீதியில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அவர்களின் சம்பளமாக என்ன மிஞ்சும் என்ற கேள்வி எழுகிறது. இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.