பெகாஸஸ் உளவு மென்பொருளை தான் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக கடந்த 2019-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை மத்திய அரசு மறுத்து வந்த போதிலும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பெகாஸஸ் மென்பொருளை 2016-இல் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றது முதலாக மம்தா பானர்ஜி பயன்படுத்தி வருவதாக பாஜக மூத்த தலைவர் அநிர்பான் கங்குலி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:
பெகாசஸ் உளவு மென்பொருளை எனது அரசு பயன்படுத்தியதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அவர்களிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறதா? தங்கள் மீதான தவறை மறைக்க அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர். உண்மையில், பெகாசஸ் மென்பொருளை மேற்கு வங்க காவல்துறைக்கு விற்க இஸ்ரேல் நிறுவனம் முயற்சித்தது. அதற்கு ரூ.25 கோடியும் விலை பேசப்பட்டது.
இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், உடனடியாக அதனை நிராகரித்தேன். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதிலும், கருத்துரிமையை நசுக்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், அந்த மென்பொருளை வாங்குவதை தவிர்த்தேன். ஆனால் மத்திய அரசோ, அரசியல் காரணங்களுக்காக இதனை பயன்படுத்தி வந்திருக்கிறது. இதேபோல, பாஜக ஆளும் மற்ற மாநில அரசுகளும் பெகாஸஸ் மென்பொருளை வாங்கியிருக்கின்றன என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM