பெங்களூரு: பெங்களூரில் போர் விமானங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புக்கான 7 மாடி கட்டிடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பெங்களூரு தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்க கூடிய நவீன நடுத்தர வகையை சேர்ந்த போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வந்தது. நாட்டின் கட்டுமானத் துறையின் வரலாற்றில் முதன்முறையாக, பெங்களூரு நகரில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்து தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சாதனை படைத்திருக்கிறது. இரும்பு தூண்கள், உத்தரங்கள், சிமெண்ட் சிலாப்கள் ஆகியவற்றை கொண்டு குறுகிய காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த கட்டிடம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் சார்ந்த நடவடிக்கைகளுக்கும், போர் விமானங்களின் விமான கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்ட ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர்சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்பின்பு, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.