சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்தி மூவர் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.இவ்விழாவில், பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகன பெருவிழா, சூரிய வட்டம், சந்திரவட்டம், அதிகார நந்தி வாகனத்தில்சுவாமி எழுந்தருளல் உள்ளிட்டவிழாக்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக, காலை 10.30 மணிக்கு திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், பகல் 12 மணிக்கு என்பைபூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிற்பகல் 2.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், 63நாயன்மார்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய’ என முழக்கமிட்டனர்.
சப்பரங்கள் அணிவகுப்பு
தொடர்ந்து விநாயகர் முன்னே சப்பரத்தில் செல்ல வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக் கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீர பத்திர சுவாமிகள் வீதியுலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்களும் வீதியுலா வந்தனர். தொடர்ந்து, காவல் தெய்வமான கோலவிழியம்மனும் வீதியுலா வந்தார்.
இதையடுத்து உற்சவ மூர்த்திகள் அனைவரும் இரவு 10 மணியளவில் மீண்டும் கோயிலை அடைந்தனர். 63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் காட்சியை காணகாலையில் இருந்தே சென்னைமட்டுமன்றி புறநகர் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். திருவிழாவையொட்டி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் பந்தல்அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.
அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி. 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோயிலைச் சுற்றி மாட வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர். விழாவின் மற்றொருமுக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை இரவு 7 மணிக்குநடைபெறுகிறது.