புதுடெல்லி: மருத்துவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க பிரத்யேக பாதுகாப்புப் படைகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமுவின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா பதிலளித்துள்ளார்.
மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான தண்டனைகளை அதிகரிப்பது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதிலில், “அரசியலமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்கள் மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வருபவை. எனவே மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிப்பது, வன்முறையின் போது உடனடியாக உதவிக்கு வழிவகை செய்வது போன்றவற்றை மாநில அரசுகள் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கிரிமினல் குற்றம் என்ற சட்டபூர்வமான உண்மையை மனதில் வைத்து மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பெரும்பகுதி ஆக்கிரமித்த கடந்த மூன்றாண்டுகளில் மருத்துவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பற்றி மத்திய அரசிடம் தகவல் இல்லை.
கரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தபோது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பெருந்தொற்று நோய்கள் திருத்தச் சட்டத்தை செப்டம்பர் 2020-ல் மத்திய அரசு கொண்டுவந்து அமல்படுத்தியது. அதன்படி மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜாமீனில் வெளிவரமுடியாத கிரிமினல் குற்றம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதம் முதல் ஐந்தாண்டுவரை சிறை மற்றும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
வன்முறையின் போது சேதப்படுத்தப்படும் மருத்துவமனையை சீரமைக்க தேவைப்படும் பணத்தை இருமடங்காக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டபூர்வ நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க மருத்துவர்கள் மற்றும் அதுசார்ந்த பணியாளர்கள் மீது எந்தச் சூழலிலும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கீழ்கண்ட அறிவுரைகளை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
வன்முறை நிகழ வாய்ப்பும் சூழலும் உள்ள மருத்துவமனைகளில் பிரத்யேகமாக பயிற்சி பெற்ற ஒரு பாதுகாப்புப் படையை நிறுவ வேண்டும். போதிய தகவல் தொடர்புடன் கூடிய, உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடிய குழுவினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனையின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும்.
மருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கென்றே, நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி மருத்துவமனைகளிலும் காவல் நிலையங்கலிலும் வைக்க வேண்டும். மருத்துவ சேவையில் குறைபாடு பற்றி புகார் எழுந்தால் அதுபற்றி விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.
பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பதற்றத்தையும், பணியில் உள்ள மருத்துவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் போதிய அளவில் நியமிக்கபப்டுவதை உறுதிசெய்ய வேண்டும். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் எல்லா மருத்துவ மனைகளிலும் இருக்க வேண்டும். கிராமப் புறங்களிலும் தொலை தூரங்களிலும் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கூடுதல் பணச் சலுகைகளை அளிக்க வேண்டும்.
மேற்கண்ட ஆலோசனை மற்றும் அறிவுரைகள் அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து கண்காணிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. சமீபத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டிலும் மருத்துவர்களின் பாதுகாப்பு பற்றி அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்.