மிரட்டறீங்களா.. உருத்தெரியாமல் ஆக்கி விடுவோம்.. அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யாவை மிரட்டி, உருட்டி பணிய வைக்க அமெரிக்கா நினைத்தால், அந்த நாட்டை மட்டுமல்ல எங்களது அத்தனை எதிரிகளையும் உருத்தெரியாமல் அழித்து விடுவோம் என்று
ரஷ்யா எச்சரிக்கை
விடுத்துள்ளது.

எங்களது எதிரிகளை அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து அமெரிக்கா தனக்கு எதிராக அணி திரட்டி வருவதை குறிப்பிட்டு இவ்வாறு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் முக்கிய உதவியாளரும், முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெத்வதேவ் கூறுகையில் அமெரிக்கா தலைமையிலான அத்தனை எதிரிகளையும் ஒட்டுமொத்தமாக சந்திக்க நாங்கள் தயார். அவர்கள் இருக்க வேண்டிய இடத்தை அவர்களுக்கு காட்டத் தயங்க மாட்டோம். ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பயம் இப்போது அலறலாக மாறியுள்ளது. ரஷ்யாவை மிரட்டி உருட்டி மண்டியிட வைக்க முயல்கிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். உருத்தெரியாமல் ஆக்கி விடுவோம் என்று மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா செஞ்சது தப்பு.. எதிர்த்து வாக்களித்த இந்திய நீதிபதி.. சர்வதேச கோர்ட்டில் பரபரப்பு!

நேட்டோ
அமைப்பில் ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக சேர்த்து வருகிறது அமெரிக்கா. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளையும் இதில் சேர்த்து ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் திட்டம். பால்டிக் நாடுகளை ஏற்கனவே அது நேட்டோவில் சேர்த்து விட்டது. இப்போது உக்ரைனையும் அது குறி வைத்துள்ளது.

ஐரோப்பாவிலேயே ரஷ்யாவுக்கு அடுத்து மிகப் பெரிய நாடு உக்ரைன்தான். எனவே உக்ரனையும் பிடித்து விட்டால், ரஷ்யா நமது அடிமை போல மாறி விடும். நம்மைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது என்பது அமெரிக்காவின் எண்ணமாகும். இதை மனதில் வைத்துத்தான் நீண்ட காலமாக அது செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் திட்டத்துக்குப் பலியாக வேண்டாம். நேட்டோ அமைப்பில் இணைய வேண்டாம் என்று உக்ரைனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ரஷ்யா. ஆனால் அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் ரஷ்யாவையே எதிர்க்கத் துணிந்தது உக்ரைன். இதையடுத்து உக்ரைனுக்கு பாடம் கற்பிக்க திட்டம் போட்டது ரஷ்யா. அந்தத் திட்டத்தின்படி தற்போது அதிரடியான போரில் குதித்துள்ளது. இதில் உக்ரைனுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் எதிர்பார்த்தபடி அமெரிக்கா இந்தப் போரில் நேரடியாக உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. ஐரோப்பிய நாடுகளும் அச்சத்துடன்தான் உள்ளன.

1000 பேர் தஞ்சமடைந்திருந்த தியேட்டர்.. குண்டு வீசித் தகர்த்தது ரஷ்யா.. பெரும் பரபரப்பு!

இதனால் உக்ரைன் தனது நிலையிலிருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறது. நேட்டோவில் சேருவதை கைவிடவும் அது முடிவு செய்துள்ளது. ஆனால் அமெரிக்கா பின்னால் இருந்தபடி உக்ரைனை தொடர்ந்து தூண்டி விட்டபடி இருக்கிறது. இந்த நிலையில்தான் ரஷ்யா இப்படி ஒரு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்யா அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள நாடு என்பதாலும், புடின் வில்லங்கமான ஆள் என்பதாலும், அமெரிக்காவுக்கு உள்ளுக்குள் உதறல் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில்தான் மெத்வதேவின் எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது.ஒரு வேளை அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டால் நிச்சயம் ரஷ்யா வேறு மாதிரியான திட்டங்களைக் களம் இறக்கலாம் என்ற அச்சமும் உலக நாடுகளிடம் உள்ளன. பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்று ராகவா லாரன்ஸ் படத்தில் கற்பனையாக காட்சி வைத்தார்.. ஆனால் இன்று நிஜத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.