புதுடெல்லி: முதுகலை பட்டம் பெறாமல் நேரடியாக பிஎச்டி படிக்கும் வகையில், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகம் செய்கிறது. இதற்கான முடிவுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் 556வது கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 ஆண்டு இளநிலை படிப்புகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது. முதுகலை படிப்பு பயிலாமல் நேரடியாக பிஎச்டி (முனைவர் பட்டம்) சேரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படித்தால், முதுகலை படிப்பை பயிலாமல் நேரடியாக பிஎச்டி சேர முடியும். ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன், விருப்பத் தேர்வாக 4 ஆண்டுகால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்த உள்ளது. 4 ஆண்டுகால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக்கல்வி வழியிலும் பயில முடியும். இந்த 4 ஆண்டுகால படிப்பில் சேரும் ஒருவர், எப்போது விரும்பினாலும் பாதியில் படிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம். மேலும் நேரடியாக கல்லூரிகளுக்கு செல்லாமல், ஆன்-லைன் வழியில் மாணவர்கள் பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘இளங்கலைக் கல்வியில் தற்போதுள்ள கட்டமைப்பில் பல பிரச்னைகள் உள்ளன. இன்றைய கல்வி முறையில் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை விட பல திறன்களைக் கொண்ட மனித வளங்களை நிறுவனங்கள் தேடுகின்றன. எனவே, மாணவர்கள் முழுமையான கல்வி, சமூக ஈடுபாடு, சேவை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் மதிப்பு அடிப்படையிலான கல்வி ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொதுக் கல்வியின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். நான்கு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான சில பாடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மூன்று செமஸ்டர்களில் முறையில் தேர்வுகள் இருக்கும். நான்கு வருட பாடத்திட்டத்தில் 160 கிரெடிட்கள் வழங்கப்படும்; 15 மணிநேர வகுப்பறை கற்பித்தலுக்கு ஒரு கிரெடிட் என்று கணக்கிடப்படும். ஏழாவது செமஸ்டரின் தொடக்கத்தில், மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை (பிஎச்டி) மேற்கொள்ள முடியும். எட்டாவது மற்றும் இறுதி செமஸ்டரில் அவர்கள் ‘மேஜர்’ என்று அறிவிக்கப்படுவார். பிஎச்டிகளுக்கான மொத்த இடங்களில் 60 சதவீதத்தை நெட்/ஜேஆர்எஃப் தேர்ச்சி பெற்ற மாணவர்களாலும், மீதமுள்ளவை பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவும் நிரப்பப்பட பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. புதிய முனைவர் பட்டம் பெறுபவர்கள், ஒழுக்கத்தைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துடன் தொடர்புடைய கற்பித்தல், கல்வி, கற்பித்தல் அல்லது எழுத்து ஆகியவற்றின் அடிப்படையிலான படிப்புகளை எடுக்க வேண்டும். முனைவர் பயிற்சி காலத்தில் கற்பித்தல் அனுபவத்தைப் பெற வேண்டும் என்று வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன’ என்றார். முன்னதாக கடந்த 10ம் தேதி நடந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் 556வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, உயர்கல்வி கட்டமைப்பில் இளங்கலைப் பட்டப்படிப்புகள் முதல் பிஎச்டி வரை மாற்றியமைத்தல் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.