கீவ்,
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 22-வது நாளாக நீடிக்கிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரான இவான் பெடோரோவை கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.
அதன் பிறகு கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்து வந்தது. இந்தநிலையில் மெலிட்டோ போல் நகர மேயர் ரஷிய படை பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவரை மீட்பதற்காக உக்ரைன் ராணுவம் தான் பிடித்து வைத்திருந்த 9 ரஷிய வீரர்களை திருப்பி அனுப்பியது. ரஷிய வீரர்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையடுத்து மேயரை ரஷிய படை விடுவித்து உள்ளது.