ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் புகுஷிமா பகுதியே குலுங்கியது. ஜப்பானின் கிழக்கு பகுதியிலும் குறிப்பாக தலைநகர் டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இஸ்ரேலில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ்
இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானின் வைரஸின் திரிபாக இது தெரிகிறது. இதற்கு பிஏ.1 மற்றும் பிஏ.2 என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற வைரஸை உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் மூடல்
இலங்கையில் மிகப்பெரிய சமலையல் எரிவாயு உருளை நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்றவை மூடப்பட்டுள்ளன.
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
மருத்துவர்கள், நோயாளிகளை பணையக் கைதிகளாக பிடித்துள்ள ரஷ்யா
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. அங்குள்ள பிராந்திய தீவிர சிகிச்சை மருத்துவமனையை நேற்று முன்தினம் இரவில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றின.
அங்கு 500 பேரை பணயக் கைதிகளாக ரஷ்யா பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணயக்கைதிகளக பிடித்த 500 பேரை ரஷிய படைகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்திய நீதிபதி
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 நாள்களுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பான விசாரணையின்போது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் நீதிபதி தல்வீர் பண்டாரி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தார்.
இதையும் படியுங்கள்: போரை எதிர்த்த ரஷ்ய பெண் செய்தியாளர்! ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பு.. மேலும் செய்திகள்
இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் கருதப்பட வேண்டும். இது இந்திய அரசின் நிலைப்பாடு கிடையாது. உக்ரைன்-ரஷ்யா விவகாரம் தொடர்பான ஐ.நா. ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய வாக்களிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகவும், அதேநேரம், பேச்சுவார்த்தை இந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இந்தியா அறிவித்தது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“