ரேஷன் கடையில் பொருட்கள் பெற ஆதார் எண் போதும்- மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை மனதில் கொண்டு, இந்த திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார்.

நாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 80 கோடி ரேஷன் பயனாளிகளில் 77 கோடி பேர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டப்படி ஒரு புலம்பெயர் தொழிலாளி, தான் வேலைக்கு செல்லும் ஊரில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில், அவருடைய குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்கள் பங்கான உணவு தானியங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை.

ஏற்கனவே உள்ள தங்களது ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அதே ஊரில் இருந்தாலும், ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல், ஆதார் எண்ணை தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பொருட்கள் பெறலாம்.

இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். தொழில்நுட்பம் அடிப்படையிலான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது.

இதுவரை 7 கோடி பேர் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெற்று பலன் அடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

பயனாளிகளுக்கு உணவு தானியத்துக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.