சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக கூறியதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண் தொடங்கப்பட உள்ளது. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் பிற முறைகேடுகளில் ஈடுபடும் ஊழல் அதிகாரிகளின் வீடியோக்களை இந்த எண்ணில் மக்கள் பதிவேற்றம் செய்து புகார் அளிக்கலாம். அந்த ஹெல்ப்லைன் எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் ஆகும். மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வேன்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஊழல் அதிகாரிகளின் வீடியோ அல்லது ஆடியோவை அனுப்பலாம் என மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் ஊழல் முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளது.
எனவே, பஞ்சாப் மாநிலத்தில் எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும் ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அதை மறுக்காதீர்கள். ஆனால், அதன் வீடியோ அல்லது ஆடியோவை பதிவு செய்து இந்த எண்ணுக்கு அனுப்புங்கள். எங்கள் அலுவலகம் அதை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல்வாதிகள் யாரையும் விடமாட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்
சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான மார்ச் 23ம் தேதி இந்த ஹெல்ப்லைன் எண் தொடங்கப்படும். இது பஞ்சாப் வரலாற்றில் மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.