சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற்று 23-ம் தேதி வங்கதேசக் கரையை நெருங்கும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 15-ம் தேதி மாலை பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தற்போது தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19-ம் தேதி நிலவக் கூடும்.
இது வடக்கு, வடமேற்கு திசையில் அந்தமான் கடலோரப் பகுதி வழியாக நகர்ந்து 20-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது மேலும் புயலாகவலுப்பெற்று வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோரப் பகுதியில் 23-ம் தேதி காலை நிலைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 17-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளிலும், 18-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
19-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 17-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிக மாக இருக்கக் கூடும்.
6 நகரங்களில் 100 டிகிரி வெயில்
நேற்று மாலை 5.30 மணி வரைபதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு, நாமக்கல், வேலூர், சேலம், மதுரை ஆகிய நகரங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.