புதுடெல்லி: கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும்என நிர்வாகம் அறிவுறுத்தியது. அங்கு பயின்றுவந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு நிர்வாகம் தடைவிதித்தது. இதற்கு எதிராக மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், “இஸ்லாமிய மத நம்பிக்கைப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய நடைமுறை இல்லை” என்று கூறியது. இத்தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அப்போது மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “எதிர்வரும் தேர்வுகளை மனதில் கொண்டு மனுவை உடனே விசாரிக்க வேண்டும்” என கோரினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர்.