பெங்களூரு: ஹிஜாப் தடையை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தி யாவசிய விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’ என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலில் முஸ்லிம் அமைப்பினர் கடை அடைப்பு நடத்தினர்.
ஏற்க முடியாது
இந்நிலையில் கர்நாடகா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, “ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரியும், தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் கர்நாடகாவில் வியாழக்கிழமை முழு அடைப்பு நடத்தப்படும். கர்நாடகா முழுவதும் கடைகளை அடைத்து ஆதரவு அளிக்க வேண்டும்” என அறிவித்துள்ளது.
முஸ்லிம் அமைப்புகளின் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பால் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்துவதாக நேற்று தெரிவித் துள்ளது.